அட பாவிப் பயலே -கி.ரா

நாடகங்களில் மனதைப் பறி கொடுத்து, மனம் ஒன்றிப் பார்ப்பவர்கள் நடந்து கொள்ளும் 'நாடக"த்தை நாம் அறிவோம்.ராமாயாணக் கதையைக் கேட்டுக் கொண்டிருந்த குலசேகரர் சீதையை ராவணன் தூக்கிக் கொண்டு போய் விட்டான் என்று கேட்டதும், சீதையை மீட்க உடனே படையை திரட்டும் படி உத்தரவிட்டதை கேள்விப்பட்டிருக்கிறோம்.

அரிச்சந்திரன் நாடகத்தில் நட்சத்திர ஐயன், அரிச்சந்திரனை வாட்டி எடுக்கும் கொடுமையைப் பார்த்த கிராமவாசி ஒருவர் கொதித்தெழுந்து, "சிறுக்கி மகனே, நானும் அப்போதே முதல் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். கொடுமை செய்கிறத்துக்கும் ஒரு எல்லை வேண்டாமா? இங்கே என்ன, ஒருத்தரும் இல்லை என்ற நினைப்பா? விடு அவனை, இப்போ என்ன செய்கிறேன் பார்" என்று கம்பை எடுத்துக் கொண்டு அடிக்க ஓங்க, எல்லோரும் அந்தப் பட்டிக்காட்டு விவசாயியை(??!) சமாதானப்படுத்தினார்களாம்: "ஐயா, இது நிஜம் இல்லை; நாடகம்" என்று!

ஆனானப்பட்ட குலசேகராழ்வாருக்கே'அந்தக் கதி' என்றால், சாமானியர்கள் எந்த மட்டு!

இப்படித்தான் எங்கள் ஊரில் ரெம்ப நாளைக்கு முன்னால் ராமாயண நாடகம் நடந்து கொண்டிருந்தது. பரதன் ராமனிடமிருந்து பாதுகைகளை வாங்கிக் கொண்டான். அப்போழுது ஒரு கிழவர் உனர்ச்சிவசப்பட்டு,பரதனைப் பார்த்துக் கீழ்கண்டவாறு சொன்னார்:"அட பாவிப் பயலே, அதையும் பிடிங்கிக் கொண்டாயா? அது ஒண்ணுதான் அவனிடமிருந்தது.காட்டில் கல்லிலே, முள்ளிலே நடந்து திரியப் போட்டுக்கொள்ள வைத்திருந்ததையும் எடுத்துக் கொண்டான் பார்?"

ராமன் பேரிலிருக்கும் அதீதமான பிரியத்தினால், கைகேயியின் மேலுள்ள வெறுப்பு, அவருக்குப் பரதன் எப்பேர்ப்பட்ட உத்தமன் என்பதைக்கூட உணர முடியாமல் செய்து விட்டது!
"அட பாவிப் பயலே, அதையும் பிடுங்கிக் கொண்டாயா...!" என்று அலறி விட்டார்.


-ஆனந்த விகடன்.
06-08-1961


(கி.ராஜநாராயணன் கட்டுரைகள்)


அன்புடன்...
சரவணன்.

1 பிட்னூட்டங்கள்:

Anonymous said...

சின்னத்திரை பார்க்கும் தாய்மார்களிடம் இதுமாதிரி நிறைய பார்க்க முடிகிறது.