தமிள் படிச்ச அளகு - கி.ரா

குற்றாலத்தில்ஒரு நாள், ரசிகமணி டி.கே.சி. அவர்களைப் பார்க்க ஒருத்தர் வந்தார்.

வந்தவர் செந்தமிழில் எங்களிடம் "அய்யா அவர்களைப் பார்க்க வந்திருப்பதாகச்" சென்னார்.

அவர் பேசுகிற விதமே அப்படி என்று தெரிந்தது.ரசிகமணி அவர்கள் இதை ரெம்ப அனுபவிப்பார்கள் என்று எங்களுக்குக் குஷி!

அவரை அழைத்துக் கொண்டு போய் விட்டோம். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சுத்தமான தமிழில் வெளுத்து வாங்கினார் மன்னன்.

ஆ....ஹா என்பது போலத் தலையை ஆட்டி, மீசைக்குள்ளேயே சிரித்துக் கொண்டு ரசித்துகொண்டு ரசிகமணி அவர்கள் " ரசித்த" விதம், எங்களுக்கு அனுபவிக்கும் படியாக இருந்தது! வந்தவர் பேசி முடிந்ததும் ரெம்ப குளுமையா, " வீட்ல சம்சாரத்துட்டயும் இப்படித்தான் பேசுவீளோ?" என்று கேட்டார்கள் ரசிகமணி! டி.கே.சி. சிரிக்காமல் கேட்டுவிட்டார். எங்களுக்குச் சிரிப்பை அடக்கப் பிரயாசைப்பட வேண்டியதிருந்தது.

இடைச்செவலுக்கு வந்த பிறகும் அந்தக் "காட்சி", ரசிகமணி அவர்கள் கேட்ட ஞாயமான கேள்வி மனசில் கேட்டுக் கொண்டேயிருந்தது. இதை கு.அழகிரிசாமியின் மாமனாரான சந்திரகிரியிடம் அப்படியே - குற்றாலத்தில் நடந்ததைச் சொன்னேன். உடனே அவர் என்னிடம் ஒரு நாட்டுக்கதையைச் சொன்னார்.

ஒரு ஊரில், அளகு என்ற பையனை வெளியூருக்குத் தமிழ் படிக்கப் பண்டிதரிடம் அனுப்பினார்கள். அவன் ரெம்ப நாள் தமிழ் படித்து முடித்துவிட்டு ஊருக்கு வந்தான். அம்மா அப்பாவைப் பார்த்ததும், "அன்னாய், தாதாய்" என்றான் மகிழ்ச்சியுடன், பெற்றவர்களுக்கு "திக்" கென்றது!

"என்ன சொல்லுகிறான் பயல்" என்று திகைத்தார்கள்,"ஏலே அளகு, என்ன சொல்லுதே?" என்று கேட்டார்கள். திரும்பவும் அவன் அதே தோரணையில் " அன்னாய் தாதாய்" என்று சொல்லிவிட்டு "அயிற்சி மிக்கது, அடிசில் புக்கி, சிறிதே அயனம் கொணர்க" என்றான்.

பெத்த தகப்பன் பதறித்தான் போனான்!

"அட பாவிப் பயலே! ஒன்னே தமிள் படிக்கதான்லே அனுப்ச்சோம்; நீ என்ன பாசையெல்லாமோ போசுதயே!"

அந்த ஊருக்குப் பக்கத்தில் எப்பவோ ஒரு லாட சன்யாசியை கொள்ளைக்காரர்கள் வழிப்பறி செய்து கொன்று போட்டுவிட்டார்கள். தொலைதூர வடநாட்டிலிருந்து வந்த அந்த லாட சன்யாசி போயாக மாறி யாரையாவது பிடிப்பான். அந்த லாட சன்னாசிப் பேய் பிடித்த ஆள் பேசுவது இப்படித்தான் யாருக்கும் விளங்காது, தங்கள் பிள்ளைக்கும் அதே பேய்தான் - தனியாக நடந்து வந்தபோது - பிடித்துவிட்டது என்று வருத்தப் பட்டார்கள்.

போய்களுக்கு எருக்கம் மிளாரு கொண்டு வந்து நாளு சாத்து சாத்தினால் " போறேன் போறேன்" என்று அலறிக் கொண்டு போய்விடும். ஆகையால், எருக்கம் மிளாறு கொண்டு வரச் சொன்னார்கள்.

ஊரே கூடிவிட்டது, எல்லாருக்கும் வருத்தம் தான், " ஆசயாய்ப் படிக்கப் போன பிள்ளையை, இப்படி பேய் வந்து பிடித்து ஆட்டுகிறதே" என்று,

ரெம்ப தூரத்திலிருந்து நடந்தே வந்த பையன்; பசிகூட அமத்த முடியலையே என்று அம்மாவுக்கு வருத்தம். காலையிலிருந்து மத்தியானம் வரை அவன் கதவைத் தட்டித் தட்டி " அன்னாய் தாதாய், அன்னாய் தாதாய்" என்று அழைத்து அழைத்து அழுத்துப் போனான்.

பொழுது இறங்கியது. பசி பிராணன் போனது. அவனை அறியாமலேயே சத்தம் போட்டான் இப்படி " ஆத்தோவ் வகுறு பசிக்கி, கஞ்சி ஊத்து" - மாறி மாறி சொன்னான் பலமாக!

பெற்றவ்ர்களின் காதில் தேன் வந்து பாய்வது போல இருந்தது. பையனை எருக்கம் மிளாரினால் அடிக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. சந்தோஷம் அவர்களுக்கு, " நம்ம பெரியாட்கள் செய்த புண்ணியம், நம்ம பையனுக்குத் திரும்பவும் நல்லா பேச வந்திட்டது", என்று சொல்லி ஆறுதல் அடைந்தார்களாம்.


புத்தகம் : கரிசல் காட்டுக் கடுதாசி.
ஆசிரியர் : கி.ராஜநாரயணன்.
பதிப்பகம்: அகரம்.



அன்புடன்...
சரவணன்

கலித்தொகை - 5.நல்லந்துவனார் (மருதம்).

1.பாலை பாடிய பெருங்கடுங்கோ (பாலை).
2. கபிலர் (குறிஞ்சி)
3. மருதனிளிநாகனார்(மருதம்)
4.சோழன் நல்லுருத்திரன் (முல்லை).


5. நல்லந்துவனார் (மருதம்).


இவர் நெய்தற்கலியைப் பாடியுள்ளார். மருதக்கலியினை பாடிய மருதனிளிநாகனார் தமது அகநானுறூற்றுப் பாடல்களுள் ஒன்றில்(அகம் 59) நல்லந்துவனாரைத் "தண்பரங் குன்றத்து அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை இன்றீம் பைஞ்சுனை" எனக் குறிப்பிட்டுச் சிறப்பித்துள்ளார். இவரை மதுரை ஆசிரியர் நல்லந்துவனார் என்று உயர்த்திக் கூறியுள்ளனர்.சங்ககாலத்தில் மதுரை ஆசிரியர் என்று புகழப் பெற்றோர் மிகச் சிலரே. நக்கீரனாரின் நந்தை கணக்காயனார் அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்.(கணக்காயர் - ஆசிரியர்).


நல்லந்துவனார் இயற்றிய நெய்தற்கலிப் பாடல்கள் மிக பொருட்செறிவு வாய்ந்தவை. பாடலில் இவர் ஆளும் சொற்களோடு இடை இடையே சொற்களையும் தொடர்களையும் பெய்து கொண்டு பொருள் உணருமாறு பாடியுள்ளார். இவரது இப்புலமைத் திறத்தைக் கலித்தொகையின் உரையாசிரியர் நச்சினார்க்கினியர்,

"சொல்லொடும் குறிப்பொடும் முடிவுகொள் இயற்கை புல்லிய கிளவி எச்சமாகும்".

என்பதனால் சொல்லெச்சமும், குறிப்பெச்சமுமாகத் தம் பேரறிவு தோன்ற ஆசிரியர் நல்லந்துவனார் செய்யுட் செய்தார் - என்று குறிப்பிட்டுப் பாராட்டுகின்றார். தமது அரிய உரையில் அத்தகைய செய்யுள்களை நன்கு விளக்கிக் காட்டுகின்றார்.


நல்லந்துவனார் செய்தற்கலி தவிர அகநானுற்றில் 1 பாடலும், நற்றிணையில் 1 பாடலும், பரிபாடலில் 4 பாடல்களும் பாடியுள்ளார். பாடற்பணி மட்டுமின்றி சங்கப் பாடல்களைத் தொகுக்கும் பணியையும் மேற்கொண்டு கலித்தொகையைத் தொகுத்து அளித்தவரும் இப்புலவர் பெருமகனேயாவார். இந்நூலுக்கு இவர் கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார். ஏனைய சங்கத்தொகை நூல்களுக்கெல்லாம் பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்த்துப் பாடினர். அஃது ஆராய்ச்சிகுரியது.

இவர் கலித்தொகை தொகுத்த செய்தியினை,

"நாடும் பொருள்சான்ற நல்லந் துவனாசான்
சூடுபிறைச் சொக்கன் துணைபுலவோர் - தேடுவார்
கூட்டுணவே வாழ்த்தோடு கொங்காம் கலியினையே
கூட்டினான் ஞாலத்தோர்க் கு"

என்ற பாடல் தெரிவிக்கின்றது.

இவர் கலித்தொகையுள் திணைகளைத் தொல்காப்பியர் கூறும் வரிசை முறையிலன்றி, பிரிவைப் பற்றிய பாலைத் திணை, கூடலைக் குறித்த குறிஞ்சித்திணை, ஊடலை உணர்த்தும் மருதத்திணை, இருத்தலைப் பற்றிய முல்லைத்திணை, இரங்கலை எடுத்துரைக்கும் நெய்தல் திணை என வரிசைப் படுத்தியுள்ளார்.

இவர் நெய்தற் திணைக்குரிய சிறுபொழுதாகிய ஏற்பாடு(மாலை)பற்றியும், அதனோடு இயைபு பற்றி இரவுப் பொழுது பற்றியும் பொழுது வருணனையாகப் பாடிய செய்திகள் அழகியன.

அவற்றுள்"நாள் முழுதும் ஓயாது அலையெறியும் கடல்கூட நடுயாமத்தில் அலையடங்கி அமைதி அடைகிறது" என்று கற்பனை செய்து அவ்யாம நேரம்வரை பூஞ்சோலைகளில் வண்டுகள் இசைபாட, இவ்விசையொலியைக் கேட்டுக் கடல் கண்ணயர்ந்து துயில் கொள்கின்றது எனப் பாடுகின்றார். அதற்குச் சிறந்த ஓர் உவமையும் அமைக்கின்றார். பரமத்தில் திருமால் நாரதர் தும்புரு முதலியோரின் யாழிசை கேட்டுத் துயில்வதைப் போல அக்காட்சி இருந்தது என்கின்றார்.

"கரும்பார்க்கும் குரலினோடு இருந்தும்பி யியைபூத
ஒருங்குடன் இம்மென இமிர்தலிற் பாடலோடு
அரும்பொருள் மரபின்மால் யாழ்கேளாக் கிடந்தான்போல்
பெருங்கடல் துயில்கொள்ளும் வண்டிமிர் நறுங்கானல்"

என்பவை இவரது கற்பனைச் சித்திரத்தைத் தாங்கியுள்ள அடிகளாகும்.

தோழி தலைவனை வரைவுகடாவும் துறையில் இவர் அமைக்கும் நெய்தற்கலிப்பாடல் அறநெறிகளை வரிசைப்படுத்திக் கூறும் அழகு எண்ணி மகிழத்தகுந்தது. அறம் பொருள் இன்பம் என்னும் மூன்று பகுதிகளையும் சேர்ந்த இன்றியமையத நெறிகள் சிலவற்றை இதில் வரிசைப்படுத்தியுள்ளார்.

ஆற்றுதல் என்பது அலந்தவர்க்கு உதவுதல்.(ஆற்றல் - இல்வாழ்க்கை நடத்துதல்) என்று அறநெறியையும்,போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை என்று இன்ப நெறியையும் முறையெனப் படுவது கண்ணோடது உயிர் வெளவல் என்று பொருள் நெறியையும் இவர் எடுத்துக் காட்டுதலை என்றும் நினைவு கூர்ந்து மகிழலாம். இவ்வடிகள் முதலியவை திருக்குறள் கருத்துக்களை அடியொற்றி நிற்பது கருதத்தக்கது.


இத்துடன் சங்க இலக்கியம் கலித்தொகை - பாடினோர் வரலாறு - நிறைவு பெறுகின்றது.


அன்புடன்...
சரவணன்.