கலித்தொகை 3. மருதனிளநாகனார் (மருதம்).

1.பாலை பாடிய பெருங்கடுங்கோ (பாலை)
2. கபிலர் (குறிஞ்சி).


3. மருதனிளநாகனார்.


இவர் மருதக்கலியைப் பாடியுள்ளார். இதைத் தவிர அகநானூற்றில் 22 பாடல்களும், குறுந்தொகையில் 4 பாடல்களும், நற்றிணையில் 12 பாடல்களும், புறநானுற்றில் முறையே பாண்டியன் கூடகாரத்துத்துஞ்சிய மாறன்வழுதி, பாண்டியன் இலவந்திகைபள்ளித்துஞ்சிய நன்மாறன், நாஞ்சில் வள்ளுவன் ஆகியோரைப் பற்றியும், பொதுவாகவும் 4 பாடல்களும் பாடியுள்ளார்.

மருதக்கலியில் மருததிணையின் உரிப்பபொருளாகிய ஊடலும் ஊடல் நிமித்தமும் என்பது பற்றியப் பாட எடுத்துக் கொண்டு மகளிரின் மெல்லிய மனம் ஆடவரின் பரத்தமை ஒழுக்கத்தால் எவ்வாறெல்லாம் வருந்துகிறது என்பதையும் அதனால் அவர்கள் உரிமையோடு தம் கணவரிடம் போராடுவதையும் நயமாக எடுத்துக் கூறியும், இடித்துக் காட்டியும் அவர்களைத் திருத்தும் மாண்பினையும் விரிவாகப் பாடியுள்ளார்.

அத்தகைய மாண்புடைய பெண்டிருள் ஒருத்தி தனது கோபம் தீர்வதற்க்குரிய காரணமாக,

"விருந்து எதிர்கொள்ளவும் பொய்ச்சூள் அஞ்சவும்
அரும்பெறற் புதல்வனை முயங்கக் காணவும்
ஆங்கவிந்து ஒழியும் என் புலவி"

என்று கூறுவது விருந்தெதிர் கோடல், மக்களை வளர்த்தல் முதலிய குடும்பக் கடமைகளை, தனது காதலை விடச் சிறந்தவாகக் கருதும் அவளது குணமான்பினைப் புலப்படுத்துகின்றது.


அடுத்து....

4. சோழன் நல்லுருத்திரன்(முல்லை)

அன்புடன்...
சரவணன்.

கலித்தொகை 2. கபிலர் (குறிஞ்சி).

கபிலர்


சங்க இலக்கியப் படல்களுள் மிக அதிகமான எண்ணிகையுள்ள பாடல்களைப் பாடிய கபிலர் கலித்தொகையில் குறிஞ்சிக் கலியினைப் பாடியுள்ளார்.இவர் அகத்திணைகள் பலவற்றைப் பாடும் திறமுடையவராயினும் கலித்தொகையில் குறிஞ்சித்திணை பற்றிப் பாடியது மட்டுமன்றிப் பத்துப் பாட்டில் குறிஞ்சிப் பாட்டையும், ஐங்குறு நூற்றில் குறிஞ்சித் திணை பற்றியே நூறு பாடல்களையும் பாடியதோடு, இத்திணைபற்றி அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய நூல்களிலும் மிகுதியான பாடல்களைப் பாடியுள்ளார். எனவே குறிஞ்சி பாடிய கபிலர் என்றே இவரைக் கூறாலாம்.

இவர் கடையேழு வள்ளல்களுள் ஒருவனாகிய வேள்பாரியின் உற்ற நண்பராக விளங்கினார்.அவன்பால் மட்டுமின்றி அவனது புறம்புமலையினிடத்தும் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தார். இவரது வாழ்க்கை பாரிவேளின் நட்பில் பெரிதும் பிணைந்திருந்தது. அவனது இறப்புக்காக பெரிதும் வருதமுற்றதோடு அவனுடைய மகளிரைத் தக்க சான்றோரிடம் அடைக்கலப்படுத்தினார் என்பர். இவர் பாண்டிய நாட்டில் திருவாதவூரில் பிறந்தார் என்று திருவாலவாயுடையார் திருவிளையாடற்ப் புராணம் கூறும்.இவரைப் "புலனகற்ற அந்தணாளன்"என மாறோக்கத்து நப்பசலையார் பாராட்டிக் கூறுகின்றார்.

இவர் இயற்றிய பாடல்களுல் மிகச் சிறந்து விளங்குவது பத்துப் பாட்டிலுள்ள குறிஞ்சிப் பாட்டு ஆகும். "ஆரிய அரசன் பிரகத்தன்" என்பவனைத் தமிழ் அறிவித்தற்க்கு இப்பாட்டினைப் பாடினார். இதில் குறிஞ்சி நிலத்தின் பலவகைப் பூக்களையும்,சிறப்பாக பன்னிரண்டு ஆண்டுக்கொரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவையும் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அகப்பொருள் திணைகளுள் தமது மனம் கவர்ந்த குறிஞ்சித் திணையின் துறைகளுள் சிறந்ததாகிய அறத்தொடு நிற்றல் என்னும் துறை பற்றித் தோழியின் கூற்றாக இப்பாட்டினை அமைத்துள்ளார். இதில் வரும்,

"முத்தினும் மணியினும் பொன்னினும் அத்துணை
நேர்வரும் குரைய கலம்கெடின் புணரும்;
சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின்
மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்தல்
ஆசறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை
எளிய என்னார் தொல்மருங்கு அறிஞர்"

என்னும் அடிகள் ஒழுக்கத்தின் விழுப்பத்தி3னை எடுத்துக்காட்டுவனவாகும்.

இவைபோல் குறிஞ்சிக் கலியிலும் இவர் மாந்தரின் உயர் பண்புகள் பலவற்றை வற்புறுத்துவதோடு பெண்டிரின் கற்புத் திறத்தையும் அதன் வலிமையால் அவர் தம் கணவன்மார்க்கு ஆற்றல் பெருகுவதையும் தோழியின் கூற்றாக வரும் ஒரு பாடலில் தெரிவிக்கின்றார்.

"காந்தல் கடிகமழும் கண்வாங்கு இருஞ்சிலம்பின்
வாங்கமை மென்றோள் குறவர் மடமகளிர்
தாம்பிழையார் கேள்வர்த் தொழுதுஎழலால்,தம் ஐயரும்
தாம்பிழையார் தாம்தொடுத்த கோல்"

என்பவை அவ்வடிகளாகும்.

பாரிவேள் மறைந்த பின்னர் இவர் பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்தினைப் பாடிச் சேரமான் செல்வங்கடுன்கோ வாழியாதனிடம் நூறாயிரம் காணமும் அவன் நன்றா என்னும் மலை மீது ஏறி தனது கண்பட்ட அளவும் கொடுத்த நாடும் பரிசிலாகப் பெற்றார்.சங்ககாலப் புலவர்கள் பலரும் இவரைப் புகழ்ந்து கூறியுள்ளனர்.

பதினோராம் திருமுறையில் சில நூல்களைப் பாடிய கபில தேவநாயனார் என்பவர் பிற்காலத்தைச் சேர்ந்த வேறொரு புலவர் பெருமகனார் ஆவார்.


அடுத்து : 3.மருதனிளநாகனார்.



அன்புடன்...
சரவணன்.

கலித்தொகை -1.பாலை பாடிய பெருங்கடுங்கோ (பாலை).

பண்டைய தமிழ் இலக்கியம் பற்றி சிறிது எழுதலாம் என்ற எண்ணத்தில் நான் படித்துக் கொண்டிருக்கும் கலித்தொகையை எடுத்துள்ளேன்.
"சங்க இலக்கியம்-கலித்தொகை" இந்த உரையின் ஆசிரியர் முனைவர்.சுப.அண்ணாமலை.
நான் படித்தவற்றை அப்படியே உங்களின் பார்வைக்கு வைக்கின்றேன்!
கலித்தொகை மொத்தம் 5 பெரும் புலவர்களால் பாடப்ப்பட்டுள்ளது! அவர்களைப் பற்றிய குறிப்புகள்.

1.பாலைபாடிய பெருங்கடுன்கோ (பாலை).
2.கபிலர் (குறிஞ்சி).
3.மருதனிளநாகனார் (மருதம்).
4.சோழன் நல்லுருத்திரன்(முல்லை).
5.நல்லந்துவனார்.


கலித்தொகை

பாடினோர் வரலாறு

1.பாலை பாடிய பெருங்கடுங்கோ!
கலித்தொகையில் முதற்ப் பகுதியாகிய பாலைக் கலியை பாடிய இவர் சேரவெந்தருள் ஒருவர். இவர் பெயர் "சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ"எனவும் வழங்கும். அகப்பொருள் திணைகளுள்"பிரிதலும் பிரிதல் நிமித்தமும்"என்னும் உரிப்பொருளை உடைய பாலைத் திணையைப் பாடுதலில் மிக்க ஆற்றல் வாய்ந்தவர் ஆதலின்,"பெருங்கடுங்கோ"என்ற தமது இயற்ப் பெயருக்கு அடைமொழியாகப் "பாலைப் பாடிய" என்னும் சிறப்புத் தொடரைச் சேர்க்கப் பெற்றார்.

பாலைத் திணையில் இவர் பாடிய கலித்தொகைப் பாடல் ஒன்றில் பாலை நிலத்தின் கொடிய வெம்மையை மிக்க பொருத்தமான உவமைகள் வாயிலாக எடுத்துக் காட்டுகின்றார்.

வறியவ னிளமைபோல் வாடிய சினையவாய்ச்
சிறியவன் செல்வன்போற் சேர்ந்தார்க்கு நிழலின்றி
யார்கண்ணு மிகந்துசெய் திசைகெட்டா னிறுதிபோல்
வேரோடு மரம்வெம்ப விரிகதிர் தெறுதலி
னலவுற்றுக் குடிகூவ வாறின்றிப் பொருள் வெஃகிக்
கொலையஞ்சா வினைவராற் கோல்கோடி யவனிழ
லுலகுபோ லுலறிய வுயர்மர வெஞ்சுரம்;

என்ற இவரது வருணனை நிலத்தின் கொடுமையை மட்டுமின்றி வறுமைத் துன்பம், சிறியார் செல்வத்தின் பயனின்மை,அகந்தை கொண்டோரின் அழிவு,கொடுங்கோல் அரசின் கீழ்வாழும் குடிமக்களின் அல்லல் ஆகியவற்றையும் நன்கு எடுத்துக் காட்டுகிறது.
இங்குத் தாம் பாடிய மன்னனைப் போல அன்றி, இவர் கொடைப் பண்பும், வீரமும் உடைய நல்லரசராக விளங்கினார். புறநானுற்றில் இவரைப் பாடிய போய்மகள் இளவேயினி என்னும்சான்றோர் இவர் பாணருக்குப் பொற்றாமரையும், பாடினிக்குப் பொன்னரி மாலையும் பரிசாக வழங்கியமையைப் புகழ்கின்றார்.
இந்நல்லிசைச் சான்றோர் பாலைத் திணையைப் பற்றி மட்டுமே அகநானுற்றில் 12 பாடல்களும் குறுந்தொகையில் 10 பாடல்களும் நற்றிணையில் 10 பாடல்களும் பாடியுள்ளார்.புறநானுற்றில் இவர் பாடியதாக அடிகள் சிதைந்துள்ள பாடல் ஒன்று கிடைத்துள்ளது.


அடுத்து: 2.கபிலர்.

அன்புடன்...
சரவணன்.

அட பாவிப் பயலே -கி.ரா

நாடகங்களில் மனதைப் பறி கொடுத்து, மனம் ஒன்றிப் பார்ப்பவர்கள் நடந்து கொள்ளும் 'நாடக"த்தை நாம் அறிவோம்.ராமாயாணக் கதையைக் கேட்டுக் கொண்டிருந்த குலசேகரர் சீதையை ராவணன் தூக்கிக் கொண்டு போய் விட்டான் என்று கேட்டதும், சீதையை மீட்க உடனே படையை திரட்டும் படி உத்தரவிட்டதை கேள்விப்பட்டிருக்கிறோம்.

அரிச்சந்திரன் நாடகத்தில் நட்சத்திர ஐயன், அரிச்சந்திரனை வாட்டி எடுக்கும் கொடுமையைப் பார்த்த கிராமவாசி ஒருவர் கொதித்தெழுந்து, "சிறுக்கி மகனே, நானும் அப்போதே முதல் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். கொடுமை செய்கிறத்துக்கும் ஒரு எல்லை வேண்டாமா? இங்கே என்ன, ஒருத்தரும் இல்லை என்ற நினைப்பா? விடு அவனை, இப்போ என்ன செய்கிறேன் பார்" என்று கம்பை எடுத்துக் கொண்டு அடிக்க ஓங்க, எல்லோரும் அந்தப் பட்டிக்காட்டு விவசாயியை(??!) சமாதானப்படுத்தினார்களாம்: "ஐயா, இது நிஜம் இல்லை; நாடகம்" என்று!

ஆனானப்பட்ட குலசேகராழ்வாருக்கே'அந்தக் கதி' என்றால், சாமானியர்கள் எந்த மட்டு!

இப்படித்தான் எங்கள் ஊரில் ரெம்ப நாளைக்கு முன்னால் ராமாயண நாடகம் நடந்து கொண்டிருந்தது. பரதன் ராமனிடமிருந்து பாதுகைகளை வாங்கிக் கொண்டான். அப்போழுது ஒரு கிழவர் உனர்ச்சிவசப்பட்டு,பரதனைப் பார்த்துக் கீழ்கண்டவாறு சொன்னார்:"அட பாவிப் பயலே, அதையும் பிடிங்கிக் கொண்டாயா? அது ஒண்ணுதான் அவனிடமிருந்தது.காட்டில் கல்லிலே, முள்ளிலே நடந்து திரியப் போட்டுக்கொள்ள வைத்திருந்ததையும் எடுத்துக் கொண்டான் பார்?"

ராமன் பேரிலிருக்கும் அதீதமான பிரியத்தினால், கைகேயியின் மேலுள்ள வெறுப்பு, அவருக்குப் பரதன் எப்பேர்ப்பட்ட உத்தமன் என்பதைக்கூட உணர முடியாமல் செய்து விட்டது!
"அட பாவிப் பயலே, அதையும் பிடுங்கிக் கொண்டாயா...!" என்று அலறி விட்டார்.


-ஆனந்த விகடன்.
06-08-1961


(கி.ராஜநாராயணன் கட்டுரைகள்)


அன்புடன்...
சரவணன்.

இந்தியாவில் விதவைகளின் பரிதாபகரமான நிலைமை!

தமிழில் கட்டுரை எழுத வேண்டும் என்று எனக்கு ஆசை அதன் ஆரம்பமாக எனக்கு மிகவும் பிடித்த பாரதியாரின் காட்டுரையை முதலில் எழுதுகிறேன்.

ஸ்ரீமான் மொஹன்தாஸ் கரம்சந்த் காந்தி( மாகாத்மா காந்தி)யால் நடத்தப்படும் "நவஜீவன்" என்ற பத்திரிக்கையில் ஒருவர் பாரத தேசத்து விதவைகளைப் பற்றிய சில கணக்குகளைப் பிரசுரம் செய்திருக்கிரார்.
அவற்றுள் குழந்தை, கைம்பெண்களைப் பற்றிய பின்வரும் கணக்கு மிகவும் குறிப்பிடத்தக்கது.

வயது----------மணம்புரிந்த மாதர்-------கைம்பெண்கள்
0-1-------------13212--------------------1014
1-2-------------17753--------------------856
2-3-------------49787--------------------1807
3-4-------------134105-------------------9273
4-5-------------302425-------------------17703
5-10------------2219778------------------94240
10-15-----------10087024------------------223320
இந்த கணக்கின்படி இந்தியாவில் பிறந்து ஒரு வருஷமாகும் முன்னரே விதவைகளாய்விட்ட மாதர்களின் தொகை 1,014. மற்றும்15 வயதுக்குக் குறைந்த கைம்பெண்களின் தொகை 3.5 லட்சம்.இவர்களில் சற்றுக்குறைய 18000 பேர் 5 வயதுக்குட்பட்டோர்:
இப்படிபட்ட கணக்குகள் சில கொடுத்துவிட்டு அவற்றின் இறுதியில் மேற்படிக் கடிதம் எழுதியவர்."இக் கைம்பெண்களின் மொத்தத் தொகை மிகவும் அதிகமாக இருக்கிறது.இதைப் படிக்கும் போது எந்த மனிதனுடைய மனமும் இளகிவிடும்(இந்நாட்டில்) விதவைகள் என்ற பாகுபாட்டை நீக்க முயல்வோர் யாருளர்?"என்று சொல்லி வருத்தப்படுகிறார்.
இந்த வியாக்கியானம் மீது மகாத்மா காந்தி பாத்திராதிபர் என்ற முறையில் வியாக்கியானம் எழுதியிருக்கிறார்.அந்த வியாக்கியானம் ஆரம்பத்தில் ஸ்ரீமான் காந்தி"மேலே காட்டிய தொகையைப் படிப்போர் அழுவார்கள் என்பது திண்ணம்"என்கிறார்.அப்பால், இந்த நிலைமையை நீக்கும் பொருட்டு, தமக்குப் புலப்படும் உபாயங்களில் சிலவற்றை எடுத்துச் சொல்லுகிறார். அவற்றின் சுருக்கம் யாதெனில்
(1) பால்ய விவாகத்தை நிறுத்திவிட வேண்டுமென்பதும்
(2) 15 வயதுக்குட்பட்ட கைம்பெண்களும் மற்ற இளமையுடைய கைம்பெண்களும் புனை விவாகம் செய்து கொள்ள இடம் கொடுக்க வேண்டுமென்பதுமேயாகும்.

(நன்றி...மகாகவி பாரதியார் கட்டுரைகள், பூம்புகார் பிரசுரம்,செப்டம்பர் 1977.)



அன்புடன்...
சரவணன்.